Thursday, October 12, 2023

பேரருளாளர் குரு சிவானந்தர்

தேவ தேவன் ஆனந்த தேவன்,

அறிவின் சுடரவன் ஆனந்தத் தேனவன், 

கலைமகள் திருமகனவன் மாமகன், 

உலகம் போற்றி வணங்கிய உத்தமன். (1)


அன்பின் திருவுருவம் சிவானந்தர்,

அன்னையின் அருள் நெஞ்சம் கொண்டவர், 

தூயவன் அந்த ஏழை பங்காளன்,

இணையுண்டோ அந்த குருவின் அருளுக்கு! (2)


ஆனந்தகுடீரின் வேந்தன் அவனே,

அன்பும் அருளும் வழங்கிய வள்ளல், 

வந்தவர் மனம் கசிந்து போற்றிட,

வாழ்ந்த தூய வள்ளல் பெருமான். (3)


பிறவிகள் எத்தனை எடுத்தே களைத்தாய்! 

பிறவித்தளைகள் விடுமோ உன்னை. 

நலிந்து நின்று வாடும் நண்பா,

நான் கண்ட பரவழி உனக்கும் சொந்தம். (4)


கால பாசம் கொடிது கொடிது! 

பிறவி தளையது கர்மவினைத் தொடர், 

பிறவி வேதனையுணர்ந்திட்ட அன்பா! 

அதனைக் களைந்திட ஆவன செய்வாய். (5)


பிறவியின் அவலம் அந்தோ பாவம்!

என்று உறுகி வருந்திட்ட அன்பன்,

ஆன்மா உய்ய வந்திட்ட தொண்டன்.

அன்பும் அருளும் சுரக்கும் நெஞ்சன்! (6)


ஆசை ஒழித்தே  அன்பின் வழி செல், 

சேவை பக்தி நல்மனம் கொண்டு,

குருவின் பாதத்தாமரை பற்று, 

கர்ம வினைகள் கரிந்தே போகும். (7)


பொறிகளைந்தை  கடந்தே நின்று,

மனத்தின் ஓட்டம் அசைவை நிறுத்தி, 

புத்தியின் பயன் அறிந்தே வாழ்ந்து,

அதையும் ஒழித்தே ஆனந்தம் அடைவாய். (8)


ஆன்ம  உலகின் ஆனந்த அரசன்,

அனுபவம் தந்த அறிவுரை கொண்டு, 

அன்புடன் பல அன்பர்கள் தொடர,

உலகம் போற்றி வணங்கிட வாழ்ந்தவன். (9)


இந்த தெய்வத்திருமகன் சிவானந்தன், 

எங்கள் மனதில் வாழும் பெருமகன்,

பக்தியும், நல்ல பண்பும், அன்பும், 

கலையும், தொண்டும் புகட்டும் பரமன். (10)


வாழும் முறையில் ஒன்றிய சமயம்,

உலகில் எங்கே காணக் கிடைக்கும்!

அந்த திருமுறை அறிந்தே அணைக்கும், 

அன்னை பராசக்தியின் அருள் பெற்ற மைந்தன். (11)


பூர்வ புண்ணிய வினையின் வடிவம், 

குரு சிவானந்தர் எங்கள் செல்வம்,

ஆன்ம தாகத்தை தணித்திடும் தோழன், 

சாந்தி தேடும் உள்ளத்தின் நண்பன். (12)


வாழ்க சமயம்! 

வாழ்க குரு-சிஷ்ய பரம்பரை!

No comments: